Monday, April 4, 2011
அலைகள்!

உலகம் உய்ய உதிக்கும் ஞாயிறு

நலமுற, எழுச்சி நாளும் பாடுவீர்!

ஒல்லும் வகையில் ஓங்கும் வளங்கள்

செல்லும் வழியில் சேர்க்கும் ஆறுகள்!

கதிர்கொள் கடலில் கலக்கவே விரைவதை

எதிர்சென் றழைத்தே ஏற்றம் கொள்வீர்!

விடைஞா யிறுமழை விளைமுத் தினுக்கும்,

தடையில் கொடையாய்த் தருமுறை யினுக்கும்,

துலைப்பூ சத்தில் துளிர்பவ ளத்தின்

மலைக்கும், செல்வ மணித்திரள் தனக்கும்,

வாழ்வு செழிக்க, வளங்கள் கொழிக்க,

வாழ்த்து பாடி வாழ்த்து கின்றீர்!

உள்ளம் கலந்த உறவோர்க் கெல்லாம்

துள்ளும் இன்பத் துணையா கின்றீர்!

வாழ்க்கை வெறுத்தே வருவோர்க் குமபுது

வாழ்வு பெறவே வழிகாட் டுகின்றீர்!

இழப்பைத் தாங்க இயலா தார்க்கும்

உழைக்கும் உணர்வை ஊட்டு கின்றீர்!

தளர்ந்த நெஞ்சைத் தாங்கி வருவோர்,

கிளர்ந்த ஊக்கம் கிளைத்தெழச் செய்வீர்!

இல்லறம் விழையும் இளைஞர் தமக்கே

இல்லத் துணையை இனிதாய்க் கூட்டுவீர்

உரசும் கரையின் ஊர்கள் தோறும்

உரைக்கும் விலையால் உயரும் வணிகம்!

அலைகள் தவழும் அழகிய ஊர்கள்

கலைகள் கமழக் கண்களைக் கவ்வுமே!
Thursday, March 31, 2011

கண்கள்


அகத்தினைக்உரைப்பவை அமைந்தகண்கள்!

முகத்தினில் குறிப்பினைமுகிழ்ப்பவை கண்கள்!

கண்களில் தோன்றும்காட்சிகள் பதிந்தே,

எண்ணும் தோறும்எளிதாய் மீட்பவை!

உள்ளமே நினைப்பதைஉணர்ச்சியால்சொல்பவை!

உள்ளதை உரைத்திடும்உண்மை விளம்பிகள்!

நிகழ்வுறும் காட்சியால், நிகழ்ந்தவை ஓர்ந்தே,

நிகழப் போவதைநிறைவாய்க் காண்பவை

இயற்கை படைக்கும்இன்பம் யாவும்

இயல்பாய்க் காணஇயன்றவை கண்களே!

மான்போல் கண்களோமருட்சி கொள்பவை!

மீன்போல் கண்களோமின்னி மிளிர்பவை!

அன்பினை அளிப்பவை! அருளினைச் சுரப்பவை!

இன்பினைத் தருபவை! ஈகையில் உவப்பவை!

பாசத்தில் பிணைப்பவை! பந்தத்தில் இணைபவை!

நேசத்தில் மகிழ்பவை! நேர்மையில் நெகிழ்பவை!

நினைந்திடும் பக்தியில்நிறைந்தே களிப்பவை!

உணர்வினில் கண்ணீர்உவர்ப்பாய் உதிர்ப்பவை!

ஒன்பான் சுவைகளும்ஒருங்கே காட்டிடும்

கண்களில் விஞ்சியகருப்பொருள் இலையே !

Friday, February 18, 2011

பொங்குகவே!



எங்கும்  பரந்து  வாழ்கின்ற,
ஏற்றங்  கண்ட  தமிழர்கள்,
தங்கும்  புகழ்சேர்  பண்பாட்டில்,
தகைமை  பெற்றுத்  திகழ்ந்திடுக!
சங்க  காலப்  புத்தாண்டாம்,
சாற்றும்  தையாம்  முதல்நாளில்,
பொங்கும்  இன்பம்  சேர்த்திடவே,
பொலிந்து  நன்றாய்ப்  பொங்குகவே!

இயற்கை  வழங்கும்  வளமெல்லாம்
இன்னும்  கிடைக்கப்  பெறுகின்றோம்!
செயற்கை  சேர்த்துச்  செய்வதெல்லாம்,
செயல்கள்  மாறி  வீழ்வனவாம்;
இயற்கை  அழிவைத்  தடுத்திடவும்,
இயல்பாய்  அவற்றைக்  காத்திடவும்,
முயற்சி  கொண்டே  உழைத்திடுவோம்!
முறையாய்  இன்பம்  பொங்குகவே!

தங்கம்  முதலாய்க்  கனிமங்கள்
தரணி  யெங்கும்  நிறைந்திடுக!
வங்கம்  ஏற்றும்  பண்டங்கள் 
வழங்கும்  வருவாய்  பெருகிடுக!
சங்குபவளம்நித்திலமும் 
சந்தை  வந்து  கொழித்திடுக!
மங்கை  யர்தம்  உள்ளத்தில்,
மகிழ்ச்சி  வெள்ளம்  பொங்குகவே!

படிக்கும்  மக்கள்  யாவர்க்கும்,
பயனார்  நெறியை  வகுத்திடுவோம்!
துடிக்கும்  இளைஞர்  நெஞ்சத்தில்,
தூய  பண்பை  விதைத்திடுவோம்!
மடிக்கும்  பகையை  மாற்றிடவே,
மனத்தின்  இருளைப்  போக்கிடுவோம்!
நடிக்கும்  சுற்றம்  இனம்மாற,
நலமாய்ப்  பொங்கல்  பொங்குகவே!

ஏய்க்கும்  வஞ்சம்  போக்கிடவே,
எதிலும்  கவனம்  கூட்டிடுவோம்!
மாய்க்கும்  கொடுமை  நீக்கிடவே,
மாளாத்  துயரைத்  தீர்த்திடுவோம்!
சாய்க்கும்   வறுமை  விரட்டிடவே,
சாயா  வன்மை  பெற்றிடுவோம்!
தாய்க்கும்சேய்க்கும்  நலம்சேர்த்தே
தருமம்  செழித்துப்  பொங்குகவே!

கவிஞா் வே.தேவராசு